திங்கள், 13 ஜனவரி, 2014

எமக்கு ஒப்பானவர்! - கனல் கவிதைகள்

சொற்களுக்குப் பின்னால்....!

பசுமைப் புரட்சி செய்தீர்கள்
எங்கள் வயல்களை காணவில்லை....!
வெண்மைப் புரட்சி செய்தீர்கள் 
எங்கள் மாடுகளை காணவில்லை....!
நீலப் புரட்சி செய்தீர்கள் 
எங்கள் நதிகளை காணவில்லை....!
தொழிற்புரட்சி செய்தீர்கள் 
எங்கள் தொழில்களை காணவில்லை....!

இன்னும் என்ன புரட்சி செய்ய திட்டம் ?


வரலாற்றைப் பதியமிடுவோம்!

தொடுவானில் கதிரவனும் முளைத்து எழும் - வெண்
பனித்துளிகள் புல்வெளியில் மினுமினுக்கும்!

பறவையினம் துயில் கலைந்து கூச்சலிடும் - இயற்கைதானும்
துயில் துறந்து விழித்து எழும்!

ஒற்றைக்கால் கொக்குகளால் குளம் நிறையும் - நீருக்குள்ளே
மீன்பிடிக்க நண்டினங்கள் கை விரிக்கும்!

தவளையினம் குதித்தெழுந்து நீச்சலிடும் - நீர் மேலே
நீர்ச்சிலந்தி நீர்ச்சறுக்கு ஆடிவரும்!

ஆற்றோரம் அருகுபயிர் பூத்திருக்கும் - ஆங்காங்கே
ஆவரம் பூ கையசைத்து வரவேற்கும்!

முடக்கற்றான் கொடிபடர்ந்து கிளை பரப்பும் - பெரும்
பேய்க்கரும்புக் கூட்டங்கள் காவல் நிற்கும்!

முட்கவசம் ஏந்தியிங்கு தாழை நிற்கும் - தாழம்பூ
உள்ளேன் உள்ளேனென மணம் பரப்பும்!

வேம்புகளை ஊணான்கள் தழுவி ஏறும் - ஆலம்
விழுதுகளோ வானிருந்து நிலமிறங்கும்!

தும்பைகள் தம் தலைநிறைய மலர்கள் சூடும் - சிறகடித்து
வண்ணத்துப் பூச்சிகளோ வட்டமிடும்!

மயில் கூட்டம் தம் சிறகை விரித்து ஆடும் - மதிமயங்கி
பாம்பொன்று படமெடுத்து தலையை ஆட்டும்!

வயல் வரப்பில் வாழைமீன் துள்ளி ஓடும் - நெற்கதிர்கள் 
நாணத்தால் வான் பார்த்து தலை குனியும்!

கயல்விழியர் வயல்பரப்பில் கால் பதிப்பர் - அயலையெல்லாம்
கரும்பன்றோ கிடைத்ததென்று காலை மொய்க்கும்!

உழவர்களின் வியர்வைத் துளி வயல் புதையும் - சேற்றில்
உழைப்போரின் கைகளினால் உலகுமின்னும்!

"ஓலையக்கா" கும்மாளம் ஊரைத் தூக்கும் - இணையோரின்
கும்மிகளும், குலவைகளும் பெருமை சேர்க்கும்!

ஏறுகளைத் தழுவிடுவார் அடலேறெல்லாம் -அடடா
வீழ்ந்தாலும் வென்றாலும் வீரம் வாழும்!


எங்களோடு சேர்த்து

எங்கள் கடல் ஏலம் போனது மீன்களோடு சேர்த்து

எங்கள் மலைகள் ஏலம் போனது கனிமங்களோடு சேர்த்து

எங்கள் வயல்கள் ஏலம் போனது ஆறுகளோடு சேர்த்து

எங்கள் நாடு ஏலம் போனது எங்களோடு சேர்த்து
.
..
...
....


உழைப்பின் அழகு

தேயிலைத் தோட்டங்கள் அழகாகத்தான் இருக்கிறது
தேநீர் சுவையாகத்தான் உள்ளது.
எங்கள் கண்ணீரின் நிறம் எங்கே? 
எங்கள் வியர்வையின் மணம் எங்கே? 

நீங்கள் ரசிக்கவும் ருசிக்கவும் 
படைக்கும் கடவுளர் நாங்கள்- ஆனால்
உழைப்பை வணங்கத் 
தெரியாத நீங்கள் யார்? 


புறம்போக்கு 

மக்கள்
நுழைந்தனர்.
குடிசைகள்
அமைத்தனர்.
பிறகுதான்
புறம்போக்குகள்
நுழைந்தனர் 
குடிசைகளைப் பிய்த்து எறிந்தனர்!


நீயும் நானும் ஒரே சாதி....!

என் மாளிகை அருகே உன் குடிசை
இருந்தாலும் என்ன நீயும் நானும் ஒரே சாதி!

கோயிலில் முதல் மரியாதை எனக்குத் தான் 
இருந்தாலும் என்ன 
நீயும் நானும் ஒரே சாதி! 

எனது மகள் அமெரிக்காவிலே
உனது மகன் வயல்காட்டிலே!
இருந்தாலும் என்ன 
நீயும் நானும் ஒரே சாதி!

எனது ஆலையில் உனது தம்பி 
ஒரு கூலித் தொழிலாளி! 
இருந்தாலும் என்ன 
நீயும் நானும் ஒரே சாதி!

எல்லாத் தேர்தலிலும் 
நான் வேட்பாளன் நீ வாக்காளன்! 
இருந்தாலும் என்ன 
நீயும் நானும் ஒரே சாதி!

என் தாத்தாவுக்கு மட்டுமே 
சிலை உள்ளது!
இருந்தாலும் என்ன 
நீயும் நானும் ஒரே சாதி!

சாதி மோதலில் என் தந்தைக்காக 
உன் அப்பா உயிரிழந்தார்.
அதுதானே தியாகம்!
அதுதானே 
சாதிப்பற்று!
சாதிதானே நம்மை வாழ வைக்கும்!
வாழ்வை வளமாக்கும்!
அதனால் தான் சொல்கிறேன் 
நீயும் நானும் ஒரே சாதி!




எமக்கு ஒப்பானவர் யார்!

மலமெடுப்பேன்!
மனிதக் கழிவெடுப்பேன்!
கரை தாண்டி வழிந்தோடும் சாக் கடை வழிப்பேன்!
அடைபட்ட இடங்களில் தடை உடைப்பேன்! 
முடை நாற்றம் வீசுகின்ற பிணம் சுமப்பேன்!

நீ மணக்க..


தேர்தல்!

நாமம் போட்டவன்,
பட்டை போட்டவன்,
கதர்ச்சட்டை, சிவப்புச்சட்டை, பச்சைத்துண்டு, 
மஞ்சள்துண்டு, கருப்புத்துண்டு, காவித்துண்டு,
கரைவேட்டி எல்லாம் ஊருக்குள் வரும்
#
#
#
#
#
கோவணம் பத்திரம்!


நீயும் தீவிரவாதி!

பசியால் சுருண்டு விழும் பிள்ளையின் உயிர் காக்க
ஒரு குவளை நீர் வேண்டி கையை உயர்த்திய நீயும்
ஒரு தீவிரவாதி!

வெளிநாட்டுக் கொள்ளையருக்காய் எம்
வயல்வெளியை பலி கொடுக்க மாட்டோமென்றால் 
நீயும் ஒரு தீவிரவாதி!

கல்விச்சாலை வைத்து பணம் பறிக்கும் கயவர்களை கண்டிக்க
கிளர்ந்தெழுந்தால் நீயும் ஒரு தீவிரவாதி!

கனிம வளக் கொள்ளையை தடுக்க நீ களம் புகுந்தால் நீயும்
ஒரு தீவிரவாதி!

தமிழ்நாட்டில் ஆட்சி,அலுவல், நீதி. கோயில்
அனைத்திலும தமிழ் வேண்டுமென்றால் 
நீயும் ஒரு தீவிரவாதி!

சிங்களத்தான் அடித்தான் என திருப்பி நீ
அடித்து விட்டால் மீனவனே
நீயும் ஒரு தீவிரவாதி!

ஊருப்பெண்ணை மனைவியாகச் 
சேர்த்துவாழும் சேரித்தம்பி 
நீயும் ஒரு தீவிரவாதி!

காவிரி, பெரியாறில் உரிமைகேட்டு 
உரிமை கேட்டுப் போராடும் உழவனே 
நீயும் ஒரு தீவிரவாதி!

அணு உலை வேண்டாம்
எங்களை வாழவிடு என்று அரசை எதிர்ப்பவனே 
நீயும் ஒரு தீவிரவாதி!

தமிழீழம் வேண்டுமென்று தமிழீழம் 
வெல்லுமென்று பெருமுழக்கம் செய்வோனே 
நீயும் ஒரு தீவிரவாதி!

பெண்களின் ஆடைக்குள் கைநுழைத்த 
காக்கிகளை கண் சிவந்து பார்த்தவனே  
நீயும் ஒரு தீவிரவாதி!

நாடு தீவிரவாதிகளால் நிரம்பி வழிகிறது.
கால் வைக்க இடமில்லாமல் சிறைச்சாலைகள்
அழுது புலம்புகின்றன.

சுட்ட இடங்கள் செத்த இடங்களில் எல்லாம் 
பிணங்கள் நாறிக் கிடக்கின்றன.
மரண ஓலங்களை மண்ணில் புதைத்து 
பீறிட்டு எழுகிறது "தேச"பக்தி!


பசி

இது குணம் நிறம் மணம் இல்லாதது 
மட்டுமல்ல இனமும் இல்லாதது.
மற்ற பண்டங்களைப் போல் 
இது சுவையானதும் அல்ல.
இது எரிந்து கொண்டே தான் இருக்கும்.
இதை உருவாக்கியவன் சாம்பலாகும் வரை.......! 



1 கருத்து:

  1. தமிழ்நாட்டில் ஆட்சி,அலுவல், நீதி. கோயில்
    அனைத்திலும தமிழ் வேண்டுமென்றால்
    நீயும் ஒரு தீவிரவாதி!

    பதிலளிநீக்கு