ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு தொடரும் இலங்கைத் தீவில், இப்போது சிங்கள-பௌத்தவெறிக் காடையர்களால் இசுலாமியத் தமிழர்கள் மீது தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்குப் பகுதியான பேருவளை, இசுலாமியத் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியாகும். நீண்டகாலமாகவே அங்கு தமிழின வெறுப்பைக் கக்கிக்கொண்டிருக்கும் சிங்கள-பௌத்த வெறி சக்திகள், அண்மைக்காலமாக அதிக ஆட்டம்போடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பொது பல சேனா எனும் சிங்களப் பேரினவாத- சிங்கள மதவாத வன்முறை கும்பலின் ஆதிக்கம், இனப்படுகொலை அரசின் ஆதரவோடு வளர்ந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதியன்று அங்கு பேரணி ஒன்றை நடத்த அழைப்புவிடுத்தது, பொது பல சேனா எனும் புத்தபிக்குகள் அமைப்பு. அதற்கு முன்னரே, அளுத்கம எனும் ஊர் வழியாகப் போன ஒரு புத்த பிக்குவுக்கும் உள்ளூர் இசுலாமியத் தமிழ் இளைஞருக்கும் சாலையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்காக, அந்த இளைஞரைக் கைதுசெய்து சிறையிலும் அடைத்துவிட்டது, சிங்களப் போலீசு.
ஆனாலும், வன்மம் அடங்காத இனவெறி-மதவெறிக் காடையர் கூட்டம், பேரணிக்காகத் திரட்டிய கூட்டத்தை வைத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள இசுலாமியத் தமிழர் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதலில் இறங்கியது. இதில், பேருவளை, அளுத்கம, தர்காநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இசுலாமியத் தமிழர்களின் வீடுகளும் உடைமைகளும் கடுமையாகத் தாக்கி சேதாரத்துக்கு உள்ளாகின. உயிருக்கு அஞ்சி தமிழ் மக்கள், மசூதிகளில் தஞ்சம் புகுந்தனர். முன்னதாக வன்முறையின்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால், தமிழ் மக்கள் தத்தம் வீடுகளில் அடைந்துகிடந்தனர். கணிசமான ஆண்கள் மசூதிகளில் இருக்க, பெண்களும் முதியவர்களும் இருந்த வீடுகள் மீது சிங்கள-பௌத்தவெறிக் காடையர்கள் பெரும் சேதம் ஏற்படும் அளவுக்கு தாக்கிவிட்டு, ஓடினர்.
சூன் 15, 16 இரு நாட்களும் தொடர்ந்த இனவெறி வன்முறையில், பௌத்த பிக்குகளால் மூன்று அப்பாவி இசுலாமியத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த இனவெறித் தாக்குதல் இலங்கைத் தலைநகர் கொழும்புவுக்கும் பரவியது. அங்கு பாணாந்துறை எனும் பகுதியில் இசுலாமியத் தமிழர் ஒருவரின் துணிக்கடையையும் பேரினவாத பௌத்த மதவெறியர்கள் தீவைத்து எரித்தனர்.
வெளிநாடுகள் சிலவற்றின் அழுத்தம் காரணமாக, இனவெறித் தாக்குதல் இப்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. எந்நேரமும் எங்கும் இது தொடரலாம் எனும் நிலைதான் காணப்படுகிறது.
பொதுவாகவே, இலங்கையில் ஆளும் சிங்கள-பௌத்த இனவெறிக் கும்பல் தமிழர்கள் மீது இனஅழிப்புத் தாக்குதலில், அவர்கள் மலையகத் தமிழர்கள்,யாழ்ப்பாணத் தமிழர்கள், இசுலாமியத் தமிழர்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் மட்டும், இத்தகைய பிரிவினைப்போக்கு தொடர்ந்து வெளிப்படுகிறது. இது ஒரு வகையில் தமிழர் மீதான இன அழிப்பு நடவடிக்கைக்குத் துணைசெய்கிறது.
ஈழத்தில் உள்ள இசுலாமியத் தமிழ் மக்கள், ஈழத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள். தமிழர்களிலேயே சிறுபான்மை மதத்தவராக வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமின்றி தனித்த பண்பாட்டு வாழ்க்கை முறையையும் கொண்டவர்களாக உள்ளனர். தமிழர்களிடம் மதரீதியான பண்பாட்டு அடிப்படையில் எழும் வேறுபாடுகள், மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கிறது. இது மத அடிப்படையிலான ஆதிக்க சக்திகளுக்கு துணைசெய்வதாக அமைந்து விடுகிறது.
தமிழர்களிலேயே இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆதிக்க சக்திகள், தம் நலன்களுக்காக இந்துத் தமிழர்களுக்கு எதிரானவர்களே இசுலாமியத் தமிழர்கள் என்பது போன்ற கருத்துருவாக்கத்தைச் செய்தனர். அதன் விளைவு, இசுலாமியத் தமிழர்கள் மீதான தாக்குதலை போராளி இயக்கங்கள் மேற்கொள்வதுவரை அது நீண்டுசென்றது.
அதேபோன்று இசுலாமியத் தமிழர்களிடையே உள்ள ஆதிக்கப் பிரிவினர், அது மதகுருக்களாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை, இசுலாமியர் நடுவில் உருவாக்கி, அவர்களை தங்களின் பின்னால் அணிதிரட்டிக்கொண்டனர். தொடர்ந்து அதில் கவனமாக இருக்கின்றனர்.
இத்தகைய முரண்பாடுகளை நன்கு பயன்படுத்திக்கொண்ட சிங்கள இனவெறி அரசு, தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியது. இசுலாமியத் தமிழர்களில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவிகளைத் தருவது, இசுலாமியத் தமிழர்களை தங்களுடைய நட்பு சக்திகளாகக் காட்டிக் கொள்வது போன்றவை அவர்களின் நாடகங்கள்.
தங்களின் சுரண்டல் நலன்களுக்காக சிங்கள ஆளும் கும்பலுடன் உறவாடிய இசுலாமியத் தமிழர்களில் உள்ள சுரண்டல் வகுப்பினர், ஒட்டுமொத்த தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதல்களுக்குத் துணைநின்றனர். அதன் தொடர்ச்சியே தமிழர்கள் மீதான இனப்படுகொலைவரை வந்து நின்றது. இன அழிப்பு தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
முதலில் மலையகத் தமிழர்கள், அடுத்து வடக்கு, கிழக்கு இலங்கைத் தமிழர்கள், தற்போது ஈழம் மற்றும் சிங்களர்சூழ் பகுதிகளில் வாழும் இசுலாமியத் தமிழர்கள் என அடுத்தடுத்து இடைவிடாமல் சிங்கள-பௌத்த இனவெறிக் கும்பல், தன் கோர முகத்தைக் காட்டிவருகிறது.
இந்த நிலையிலாவது, ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து, ஒரே தேசிய இனமாக ஒன்றுபட்டுப் போராட வேண்டும். இல்லையெனில் சிங்களப் பேரினவாத- பௌத்த மதவாத சக்திகளின் இனஅழிப்பில் மொத்த இனமும் புதையுண்டுதான் போக வேண்டும்.
இனம், மொழி, பிரதேச அடிப்படையில் ஈழத் தமிழ்த் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசும்போது, மேம்போக்கான அல்லது பொதுவான ஒற்றுமை பற்றிப் பேசவில்லை. ஏன்னெனில், அத்தகைய ஒற்றுமை உண்மையான ஒற்றுமையாக அமைந்துவிடாது எனபது நமக்குத் தெரியாதது அல்ல.
ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தைத் தழுவி நிற்பவர்கள், இசுலாமியர்கள் தங்களிடமிருந்து விலகி நிற்பதற்கான அடிப்படைக் காரணங்களை உணரவேண்டும். சொந்த இனத்தில் உள்ள சிறுபான்மை மதத்தவரின் பாதுகாப்பை, பண்பாட்டுத் தனித்துவத்தைப் பேணுவதை உறுதிப்படுத்தும் நிலையை உருவாக்கவேண்டும். ஒட்டு மொத்த ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் நலன்களுக்குள் உள்ள பல்வேறு பிரிவு மக்களின் உரிமைகள், நலன்கள் காக்கப்படவேண்டும்.
இசுலாமியத் தமிழர்களும் தங்களின் மத அடையாளங்களை மட்டும் பேணாமல், இன, மொழி அடிப்படையில் ஒன்றுபட்டுப் போராடவும் தமக்கான அரசியல் அதிகாரத்துக்கான போராட்டங்களுக்கு மற்ற மதவழிபட்ட ஈழத் தமிழ் மக்களுடன் இணைந்துநிற்க வேண்டும்.
அவ்வாறின்றி மீண்டும் மீண்டும் சிறுபான்மையினர் என்ற மத அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காக மட்டும் போராடுவது என்பதற்குள் நின்றுகொண்டால், சிங்கள இனவெறி அரசின் அதிகாரத்தின் கீழ் மீண்டும் மீண்டும் இன ஒடுக்குமுறையை, மத ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்கமுடியாதது.
தமிழகத்தில் உள்ள இசுலாமியத் தமிழ் அமைப்புகளும் இலங்கையில் நடைபெறும் இசுலாமியர் மீதான ஒடுக்குமுறைகளை மத அடிப்படையில் மட்டும் சுருக்கக்கூடாது. ஏனெனில், சிங்கள இனவெறியர்கள், இசுலாமியர்களை மத அடிப்படையில் மட்டும் தாக்கவில்லை, தமிழர் என்பதற்காக(வும்) தாக்கியுள்ளனர். அதற்கான எதிர்ப்புகூட தமிழ் இனம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் மட்டும்தான் கிளம்பி உள்ளது. அகில இந்திய அளவில் மற்ற இனங்களில் உள்ள முசுலிம் அமைப்புகள் எதுவும் குறிப்பிடும்படியாகப் போராட்டம் எதுவும் நடத்தவில்லை; கண்டனக் குரலும் கொடுக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளத்தக்கது.
தமிழகத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும் இசுலாமியத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழும்போதே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து அவர்களைப் பிரிக்கும் சக்திகளையும் அடையாளம் காணவேண்டியுள்ளது. இவர்கள் தங்களின் தமிழினவிரோத அரசியலை மறைக்கவும், சுயவிளம்பரத்துக்காகவும் சிங்கள ஆளும் கும்பலுக்குத் துணைபோகும் வகையில் செயல்படுகின்றனர். இதற்காக வரலாற்றைத் திரிக்கவும், மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை உருவாக்கவும் தயங்கவில்லை.
தமிழகத்தில் மா.லெ. குழு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பு அதன் அண்மைய வெளியீடு ஒன்றில், இசுலாமியத் தமிழர்கள் தனி இனம் என்று ஒரு மோசடியான கருத்தை வெளியிட்டுள்ளது. வரலாற்றுரீதியாக தூய வடிவில் ஒரு தேசிய இனம் உருவாக முடியாது என்பதை அறிந்திருந்தும், அந்த அமைப்பு தன்னுடைய ஈழ விடுதலை எதிர்ப்பு நிலைக்காக மக்களையே கூறுபோடத் தயங்கவில்லை. இத்தகைய ‘ஆய்வுகளை’ அவர்கள் ஆளும் சிங்கள இனத்தில் எப்போதும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அது தன்னுடைய அரசியல் இதழில் இராசபக்சே அரசுக்கு எதிரான சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டம் நடப்பதாகக் கூறி, ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அந்த போராட்டம் நடந்த பகுதி, தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய கண்டி பகுதி; போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தமிழ் இசுலாமியர்கள்; போராட்டத்தின் போது தங்களுடைய பதாகையில் சிங்கள எழுத்துக்களில் எழுதியிருந்ததை வைத்து அது சிங்கள மக்களின் போராட்டம் என்று கதை எழுதிவிட்டனர்.
இவர்கள் இப்படியிருக்க, சில ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தம் பங்குக்கு ஈழ விடுதலைப் போராட்ட அரசியல் மீது சேற்றை வாரிப் பூசுகிறார்கள். இளைய அப்துல்லாஹ், சர்மிளா செய்யித் என்று கிளம்பியிருக்கும் இந்த படைப்பாளிகள் பட்டாளம் சிங்களக் கைக்கூலிகளின் பாக்கெட்டுகளில் உட்கார்ந்துகொண்டு தமீழீழத்திற்கு எதிராகக் கூவி வருகின்றனர்.
புரட்சிகர, முற்போக்கு வேடங்களைப் புனைந்துவரும் இத்தகைய தவறான சக்திகளையும் இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.
- அருவி
படங்கள் நன்றி: புதினப்பலகை தளம்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக